Saturday, 2 June 2012

இசைஞானி இளையராஜா !!


உலகின் தலைசிறந்த இசையமைப்பாளர்களுள் ஒருவரான  இசைஞானி இளையராஜா, தனது 30 வருட இசை வாழ்கையில் 950 மேலான படங்களுக்கு, 4500 மேலான பாடல்களை இயற்றியவர், இன்றும் இயற்றிகொண்டிருப்பவர்.

இவர் தேனி மாவட்டத்தில் உள்ள பண்ணயபுரத்தில் 1943 ஆம் வருடம் சூன் 2 இல் பிறந்தவர். இவரின் இயற்பெயர் ஞானதேசிகன் (எ) ராசையா ஆகும். இவருடைய தந்தை பெயர் ராமசாமி, தாயார் சின்னத்தாயம்மாள். இவர் மனைவியின் பெயர் ஜீவா. இவருடைய பிள்ளைகள் யுவன்சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா மற்றும் பவதாரிணி.

இவர் சிறுவயதிலேயே ஆர்மோனியம் மற்றும் கிட்டார் வாசிப்பதில் ஆர்வமும் தேர்ச்சியும் பெற்றிருந்தார். 1961 இல் இருந்து 1968 வரை அவருடைய சகோதரர்கள் மூவருடனும் இந்தியாவில் உள்ள பல இடங்களுக்கு நாடகக்குழுவோடு சென்று சுமார் இருபதாயிரம் கச்சேரிகளிலும் நாடகங்களிலும் பங்குபெற்றிருக்கிறார்.

இவர் 1969 ஆம் ஆண்டு தனது 29 ஆம் வயதில் திரைப்படங்களுக்கு இசையமைக்கும் ஆர்வத்தில் சென்னைக்கு வந்தார். சென்னையில் தன்ராஜ் என்பவரிடம் மேற்கத்திய பாணியில் பியானோ கருவியையும், கிதார் கருவியினையும் வாசிக்க கற்றுக்கொண்டார். பின்னர் லண்டனில் உள்ள டிரினிடி இசைக்கல்லூரியில் (CLASSICAL GUITAR -  HIGHER) தேர்வில் தங்கப் பதக்கம் பெற்றார்.

1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி என்ற திரைப்படத்தின் மூலம்  இசையமைப்பாளராக அறிமுகமான இவரின் சாதனைகள் உலகறியும். 1993 ஆம் ஆண்டு லண்டன் ராயல் ஃபில்ஹார்மானிக் ஆர்க்கெஸ்ட்ராவில் இசையமைத்ததன் மூலம், ஆசிய கண்டத்திலேயே அங்கு இசைத்த முதல் இசையமைப்பாளர் என்ற பெருஞ்சிறப்பை பெற்றார். அங்கு இசைத்தமுதல் " மேஸ்ட்ரோ " என்று அழைக்கப்படுகிறார்.

2003 இல், பிபிசி 155 நாடுகளில் எடுத்த சர்வதேச கணக்கெடுப்பில், உலகில் என்றும் சிறப்பான பத்து பாடல்கள் என்னும் பிரிவில், 1991 இல் சூப்பர்ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளிவந்த தளபதி படத்தின் ராக்கம்மா கைய தட்டு பாடல் தேர்வானது.

2010 ஆம் ஆண்டு இந்திய அரசு இவருக்கு இந்தியாவின் மூன்றாவது உயரிய விருதான பத்மபூஷன் விருது வழங்கி சிறப்பித்தது. மேலும்  சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை இவர் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Friday, 1 June 2012

குற்றாலம் !!



குற்றாலம் !!

தென் இந்தியாவின் ஸ்பா என்று அழைக்கப்படும் குற்றாலம் திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைகளின் இடையே அமைந்துள்ள ஒரு பேரூராட்சி ஆகும். வருடத்திற்கு சில மாதங்கள் தான் குற்றால அருவிகளில் தண்ணீர் விழும். எனவே குற்றாலம் வர திட்டமிட்டுருந்தால் அருவிகளில் தண்ணீர் விழுகிறதா என்று தெரிந்தபின் வருவது சரியாக இருக்கும்.

ஜூன் முதல் செப்டம்பர் வரை, தென் மேற்கு பருவமழையால் அருவிகளில் தண்ணீர், மிதமான வெப்பநிலை, குளிர் காற்று என குற்றாலம் அருவி களைகட்ட தொடங்கிவிடும். அக்டோபர் முதல் டிசம்பர் வரை வட கிழக்கு பருவமழையால் கடும் பனி மற்றும் சில நேரங்களில் கன மழை என சுற்றுசூழல் மாறிவிடும். அந்நேரம்  நீர்வீழ்ச்சியில் வெள்ளம் அதிகரிப்பதால் மக்கள் குளிக்க சில நேரங்களில் அனுமதிக்கபடுவதில்லை.

குற்றாலத்தில் உள்ள அருவிகள்

குற்றாலத்தில் மொத்தம் ஒன்பது அருவிகள் உள்ளன.
  • பேரருவி ( MAIN FALLS ), இது 60 மீட்டர் உயரத்தில் இருந்து விழும் அருவி, இடையில் பொங்குமாகடலால் அழுத்தம் தடைப்பட்டு, மக்கள் குளிக்க பாதுகாப்பான வகையில் குறைந்த தாக்கத்தை தருகிறது.
  • சிற்றருவி ( CHITRARUVI ), இங்கு நீரின் அழுத்தம் குறைந்தே காணப்படும், இதன் வழியே தான் செண்பகாதேவி மற்றும் தேனருவிக்கு செல்ல முடியும்.
  • செண்பகாதேவி அருவி ( SHENBAGADEVI FALLS ) செண்பக மரங்கள் வழியாக பாய்கிறது. அங்கு செண்பகாதேவி அம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கோவில் உள்ளது.
  • அங்கிருந்து 3 கீ.மீ தூரத்தில் தேனருவி ( THENARUVI ) உள்ளது. இரண்டு பெரிய கற்கள் இடையே 40 மீட்டர்  உயரத்தில் இருந்து நீர்வீழ்ச்சி தொடங்குகிறது.
  • ஐந்தருவி ( AINTHARUVI ) இவ்வனைத்திலும் மாறுபட்ட அருவியாகும். இங்கு ஐந்து தனித் தனி அருவிகள் உள்ளன.
  • இந்த அருவிக்கு மேலே பழத்தோட்டம் அருவி ( PAZHATHOTTA ARUVI ), அல்லது விஐபி அருவி இருக்கிறது.
  • பழைய குற்றாலம் அருவி  ( PAZHAYA COURTALLA ARUVI ) இரண்டு பாறைகள் இடையே உள்ள பள்ளத்தாக்கில் இருந்து விழுகிறது. இடையில் இது மூடப்பட்டு பின் நீரின் போக்கை மாற்றி குளிப்பதற்கு ஏதுவாக பாறைகள் செதுக்கபட்டபின் மீண்டும் திறக்கப்பட்டது.
  • புலி அருவி ( PUZHIARUVI ) செயற்கையாக உருவாக்கப்பட்டது. இவ்வருவியின் நீர் பாசனத்திற்காக திருப்பிவிடபடுகிறது
  • ஐந்து அருவி மேலே அரசு தோட்டக்கலை பூங்காவில் ஒரு சிறிய அருவி உள்ளது, ஆனால் அது பொது வரம்புக்குள் இல்லை.


அருகில் பார்க்க வேண்டிய இடங்கள்

  • தெற்குமலை எஸ்டேட் - தேனருவியில் இருந்து ஒரு மணி நேர பயணத்தில் இதை அடையலாம்.
  • ஐந்து அருவி மற்றும் பழைய குற்றாலம் அருவி அருகில் உள்ள படகு சவாரி.
  • பேரருவி அருகில் உள்ள பாம்பு மற்றும் மீன் பண்ணை
  • சிறு குழந்தை பூங்காக்கள்.


குற்றாலத்தின் சிறப்புகள்

  • குற்றாலம் அருவிகள் சார்ந்த இடம் மட்டும் அல்ல, தெய்வீகமான இடமும் கூட. சிவனின் ஐந்து சபைகளில் ஒன்றான சித்ரா சபை, இங்கு தான் உள்ளது. 100 ஆண்டுகளுக்கு முன்பு வரையப்பட்ட ஓவியங்கள் பல இங்கு உள்ளது.
  • தமிழ் கவிஞர் திருகூடராசப்ப கவிராயர் இதன் உச்சத்தை தனது குற்றால  குறவஞ்சியில் பாடியுள்ளர்.
  • மலையின் அடிவாரத்தில் உள்ள கோவில் இந்து சமய பாரம்பரியபடி சங்கு வடிவம் உள்ளது சிறப்பு.


குற்றாலம் அருகில் உள்ள சில கோவில்கள்

  • பேரருவியில் உள்ள திருகுற்றாலனாதர் கோவில்.சித்திரை மாதம் முழு நிலவின் போது பத்து நாள் சிறப்பு பிரார்த்தனை இங்கு நடைபெறும்.
  • பண்பொழியில் உள்ள திருமலைக்கோவில் - குற்றாலத்திலிருந்து  இருந்து 8 கிமீ.
  • இலஞ்சியில் உள்ள குமரன்கோவில், குற்றாலத்திலிருந்து 1 கிமீ.
  • தென்காசியில்  உள்ள காசிவிசுவநாதர்கோவில், குற்றாலத்திலிருந்து இருந்து 6 கிமீ.
  • புளியரையில் உள்ள தக்ஷினாமூர்த்தி கோவில், குற்றாலத்திலிருந்து இருந்து 12 கிமீ.
  • பாபநாசம் உலகாம்பிகை மற்றும் சிவன் கோவில், குற்றாலத்திலிருந்து 35 கி.மீ.
  • ஆரியன்கா ஐயப்பன்கோவில், குற்றாலத்திலிருந்து 35 கிமீ.


அருகில் உள்ள மற்ற சுற்றுலாத்தளங்கள்

  • பாலருவி - கேரளாவில் அமைந்துள்ள நீர்வீழ்ச்சி.
  • பாபநாசத்தில் உள்ள பாபநாசம் ஆறு, குற்றாலத்திலிருந்து இருந்து 35 கிமீ.
  • அகஸ்தியர் அருவி -  பாபநாசம் அருகே உள்ளது.
  • பாணத்தீர்த்தம் அருவி -  பாபநாசம் அருகே உள்ளது.
  • பாபநாசம் (லோயர்) அணை -  பாபநாசம் அருகே உள்ளது.
  • பாபநாசம் (உயர்), காரையார்  அணை -  பாபநாசம் அருகே உள்ளது.
  • சேர்வலார் அணை -  பாபநாசம் அருகே உள்ளது.
  • மணிமுத்தாறு அணை -  பாபநாசம் அருகே உள்ளது.
  • களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயம் -  பாபநாசம் அருகே உள்ளது.
  • மஞ்சோலை எஸ்டேட், மணிமுத்தாறு எஸ்டேட் & ஊத்து எஸ்டேட் - பாபநாசம் அருகே உள்ளது. இவ்வனைத்தும் 2300 முதல் 4200 அடி வரை அமைந்துள்ளன.


குற்றாலத்துக்கு வருவது எப்படி

சாலை  மூலமாக

சாலை வழியில் குற்றாலத்திலிருந்து பல்வேறு இடத்திற்கான தூரம்:
  • மதுரை: 160 கி.மீ.
  • திருநெல்வேலி: 59 கி.மீ
  • தென்காசி: 5 கி.மீ
  • செங்கோட்டை: 5 கி.மீ
  • மதுரை விமான நிலையத்தில் இருந்து: 160 கி.மீ
  • தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து: 120 கி.மீ
  • திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து: 190 கி.மீ

தென்காசி மற்றும் செங்கோட்டை இருந்து குற்றாலம், பஸ் போக்குவரத்து மூலம் நன்றாக இணைக்கப்பட்டுள்ளது. மதுரையில் இருந்து செங்கோட்டை வரும் பேருந்துகளாலும், திருநெல்வேலியில் இருந்து தென்காசி மற்றும் செங்கோட்டை வரும் பேருந்துகளாலும் குற்றாலத்தை அடையலாம். மேலும் கேரளா மாநிலம் புனலூரில் இருந்து செங்கோட்டை, தென்காசி, திருநெல்வேலி மற்றும் மதுரை செல்லும் பேருந்துகள் மூலவும் குற்றாலத்தை அடையலாம்.

தொடர் வண்டி மூலமாக

குற்றாலத்தில் தொடர் வண்டி நிலையம் இல்லை, ஆனால் செங்கோட்டை மற்றும் தென்காசி நிலையத்தில் இருந்து இருபது நிமிடங்களில் குற்றாலத்தை அடையலாம். இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் தொடர் வண்டிகள்.
  • பொதிகை எக்ஸ்பிரஸ்: செங்கோட்டை - சென்னை, சென்னை - செங்கோட்டை
  • பயணிகள் வண்டி: செங்கோட்டை - மதுரை, மதுரை - செங்கோட்டை
  • பயணிகள் வண்டி: செங்கோட்டை - திருநெல்வேலி, திருநெல்வேலி - செங்கோட்டை
  • பயணிகள் வண்டி: செங்கோட்டை - கொல்லம், கொல்லம் - செங்கோட்டை

சில நேரங்களில் சென்னை, ஈரோடு மற்றும் தூத்துக்குடிக்கு சிறப்பு வண்டிகள் தெற்கு ரயில்வே மூலம் இயக்கப்படுகின்றன.

பரதநாட்டியம் !!


பரதநாட்டியம் !!

மனித வாழ்வுக்கு சிறப்பு சேர்க்கும் எவ்வளவோ விஷயங்களை தமிழகம் இந்த உலகிற்கு அளித்துள்ளது. அதில் மிகவும் போற்றப்படக்கூடியதும், தனிச்சிறப்பு வாய்ந்ததும் ஒன்று உண்டு என்றால், அது பரதநாட்டியம்தான். எந்த மொழியை பேசும் மனிதர்களானாலும் ரசிக்கச் செய்யும் ஆற்றல் பரதநாட்டியத்திற்கு உண்டு.

பரதநாட்டியம் தோன்றி சுமார் 3000 ஆண்டுகள் ஆகின்றன. இது தோன்றியது தமிழ்நாட்டில் தான். பத்தாம் நூற்றாண்டில், ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் தமிழ்நாட்டில் இந்த பரதக்கலை செழுமைபடுத்தப்பட்டது.

புராணவியல் ரீதியாக பரதமுனிவரால் உண்டாக்கப்பட்டதாகவும் அதனாலேயெ பரதம் என்ற பெயர் வந்ததாகவும் கூறுவர். அதேவேளை பரதம் என்ற சொல், ப - பாவம், ர - ராகம், த - தாளம் என்ற மூன்றையும் குறித்து நிற்பதாகவும் சொல்லப்படுகிறது.  இதில் பாவம் உணர்ச்சியையும், ராகம் இசையையும் குறிக்கும், இவற்றுடன் தாளம் சேர்ந்த நடனம்தான் பரத நாட்டியம். வரலாற்று நோக்கில், தென்னிந்தியாவின் திருக்கோவில்களில், இசைக்கலைஞர்களும், தேவதாசிகள் எனப்படும் நடனமாடும் மாதரும் இணைந்து இந்த அற்புதக்கலையை உருவாக்கினர் என கூறுவர்.

பாவம் எனப்படும் உணர்ச்சிகளை முகத்தில் வெளிப்படுத்தும் தன்மையும், ராகமும், லயமும், அங்கங்களை வில்லென வளைக்கும் நடனமும் இணைந்தது தான் பரதநாட்டியம்.ஒரு பரதநாட்டிய நிகழ்ச்சி சுமார் இரண்டு முதல் மூன்று மணி நேரங்கள் வரை நீடிக்கும். நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு முன்பு விநாயக பெருமானுக்கு பாராட்டும் நன்றியும் தெரிவிக்கும் இறைவாழ்த்து பாடப்படும். இது மேலப்பிராப்தி என்று அழைக்கப்படுகிறது.

பரதநாட்டியம் ஆடும் கலைஞருக்கு இடப்புறத்தில், மிருதங்கம், வயலின், புல்லாங்குழல், வீணை ஆகியவற்றை இசைக்கும் கலைஞர்கள் அமர்ந்திருப்பர். நாட்டிய நிகழ்ச்சியின் முதல் அங்கமாக தொடய மங்கலமும், பின்னர் புஷ்பாஞ்சலியும் நிகழ்த்தப்படும். அதன் பிறகு ஸ்வரங்களும், ஜதியும் பின்தொடரும். ஒவ்வொன்றும் சுமார் 10 நிமிடங்கள் நீடிக்கும்.

நிகழ்ச்சியின் மத்திய பகுதியில் முக்கியமான வர்ணம் எனப்படும் நடன வகை இடம்   பெறுகிறது. உணர்ச்சிகளின் உச்சகட்டத்தை வெளிப்படுத்தும் இதன் உடல் அசைவுகளை ஒரு சிலரால் மட்டுமே புரிந்து கொள்ளமுடியும். நடனமாடுபவரின் பயிற்சி, தயாரிப்பு நிலை ஆகியவை இந்த வர்ணத்தில் தெளிவாக வெளிப்படும். இதில் மற்றொரு முக்கிய கட்டம், இறைவன் மீது தனக்குள்ள காதலை வெளிப்படுத்தும் ஸ்ருங்கார பக்தியாகும்.

வாழ்க்கையின் பல்வேறு மனோபாவங்களை வெளிப்படுத்தும் சிறப்பு பரதநாட்டியத்திற்கு உண்டு. பல தத்துவ கோட்பாடுகளையும், சிந்தனை போக்குகளையும், பரதத்தில் நடனமாடுபவர்கள் காட்டும் ஓர் உடலசைவும், முகபாவமும் தத்ரூபமாக நமக்கு எடுத்துக்காட்டும். நடனத்தில் கடைசி அசைவு தில்லானா . இதில் நடனம் ஆடுபவர் இசையின் லயத்திற்கு தன்னை முழுவதும் அற்பணித்து நம்மை மதிமயங்க செய்வார். நடனத்தின் முடிவில் மங்களம் எனப்படும் முடிவைக் குறிக்கும் அசைவு இடம்பெறும்.

தமிழ்நாடு சிறப்புமிக்க பல கலை படைப்புகளை, இசைவடிவங்களை உலகிற்கு அளித்திருந்தாலும் பரதத்திற்கு இணையாக ஒன்றை கூறமுடியாது என்று வெளிநாட்டு அறிஞர்களும் கூறுகின்றனர்.
நன்றி: tamilnaduonline.org

Thursday, 31 May 2012

சதுரங்க வீரர் விஸ்வநாதன் ஆனந்த் !!


சதுரங்க வீரர் விஸ்வநாதன் ஆனந்த் !!

நமது பெருமைக்குரிய தமிழரான, விஸ்வநாதன் ஆனந்த் மயிலாடும்துறையில் 1969ஆம் வருடம்  டிசம்பர்  11ல் பிறந்து சென்னையில் வளர்ந்தவர். இவர் இதுவரை ஐந்து முறை உலக சதுரங்க (WORLD CHESS CHAMPIONSHIP) போட்டியில் வென்று சாதனை படைத்தவர். முதன் முதலில் 1983'ல் தனது 14 வயதில் இந்திய சதுரங்க சாம்பியன் பட்டத்தை வென்றார் . தனது 15 வயதில் அனைத்துலக மாஸ்டர் (International Master) விருதினைப் வென்றார். தனது 16 வயதில் மேலும் இருதடவை இந்தவிருதைப் வென்றார்.

1987'ல் முதன் முதலில்,  உலக இளநிலை வாகையாளர் (WORLD JUNIOR CHESS CHAMPIONSHIP) பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை அடைந்தார். மேலும் 2000ஆம் ஆண்டில் தெகரானில் நடைபெற்ற போட்டியில் வென்றதன் மூலம் உலக சதுரங்கப் (WORLD CHESS CHAMPIONSHIP) போட்டியில் வெற்றி பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் அடைந்தார். மேலும் 2007, 2008 மற்றும் 2010லும்  உலக சதுரங்க வாகையாளர் (WORLD CHESS CHAMPIONSHIP) பட்டத்தை வென்றார். இப்பொழுது ரஷ்யா தலைநகர்  மாஸ்கோவில்  நடைபெற்ற போட்டியில் இஸ்ரேலின் போரிசு கேல்பண்டை  சமன்முறி ஆட்டத்தில் வீழ்த்தியதன் மூலம்  ஐந்தாவது முறையாக உலக சதுரங்க வாகையாளர் பட்டத்தை வென்றவர் என்ற பெருமையை அடைந்துள்ளார்.

இதுவரை 50க்கும் மேற்பட்ட சர்வேதச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் வென்றுள்ள இவர் அர்ஜுனா விருதுதேசியக் குடிமகனுக்கான விருது பத்மஸ்ரீ விருது ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது, பிரித்தானிய சதுரங்க கூட்டமைப்பின் BOOK OF THE YEAR விருது பத்மபூஷன் சதுரங்க ஆஸ்கார் - (1997, 1998, 2003, 2004, 2007, 2008),  பத்மவிபூஷன்  ஆகிய விருதுகளை பெற்றவர்.